Megameethil Yesu Rajan | மேகமீதில் இயேசு ராஜன்

பல்லவி
மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாராரே
ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க
அவரே வாராரே

ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே
அவனியில் வாராரே
மீண்டவரோ மேலோகமே செல்ல
மேதினியை விடுவார் – மேக

கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம்
கிளம்பியே எழும்பிடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்
மறைந்தே போவாரே – மேக

பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே
பாடுபட்டவர் தாமே
கூடும் நமக்கோ குறைவில்லா பலனையே
கூவியே கொடுத்திடுவார் – மேக

அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே
அவர் வரும் வேலையை எவருமே அறியார்
ஆண்டவரே அறிவார் – மேக

ஆயிரமாயிரம் அவரது வசனங்கள்
அதை அறிவிக்கின்றதே
அப்போஸ்தலர் தீர்க்கத்தரிசிகளெல்லாம்
அதையே அறிவிக்கின்றார் – மேக

ஆயிர வருடம் ஆளுகை செய்வார்
ஆண்டவர் இயேசு தாமே
நீதி சமாதானம் நிறைந்தே இருக்கும்
ஜோதியின் ஆளுகையில் – மேக

அல்லேலூயா கீதமே பாடி
அகமகிழ்ந்தாடிடுவோம்
வல்லவர் வரும் வேளையுமிதோ
மெல்லவே நெருங்கிற்றே – மேக

Close Menu
error: Content is protected !!