Paavam Paeruguthae | பாவம் பெருகுதே

பாவம் பெருகுதே!
பாரும் பரன் இயேசுவே!
அழியும் மனுக்குலம்
அதையும் இரட்சிப்பீரே!

ஆத்துமா இரட்சிப்பிழந்தவர்
ஆயிரம் ஆயிரமாய்
அன்றாடகம் இந்த மண்ணடியில்
அழிந்து சாகின்றாரே – பாவம்

இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்
எச்சரிப்பை வெறுத்து
இரட்சகர் இயேசுவை இழந்தோராய்
இன்றும் கெட்டழிகின்றார் – பாவம்

தானியேல் போல ஜெபித்திடும்
தாசர் பலர் மறைந்தார்
திறப்பின் வாசலில் நிற்கும் பலர்
தூங்கிக் களைத்துப் போனார் – பாவம்

எமது காரியமாகவே
யாரை அனுப்பிடுவேன்
என்றவர் அழைக்கும் இன்ப சத்தம்
என்னுள்ளம் தொனிக்குதே – பாவம்

ஜீவனை வெறுத்துத் தியாகமாய்
சேவையும் செய்திடுவேன்
ஜீவனுக்கீடாக ஜனங்களை
ஜீவ தேவன் தருவார் – பாவம்

வெறுங் கையாய் பரலோகத்தில்
வந்திடேன் இயேசு நாதா
ஆத்துமா ஆதாயம் செய்திடவே
ஆசீர் பொழிந்தனுப்பும் – பாவம்

Close Menu
error: Content is protected !!